என் போன் கீழே விழுந்தால் டிஸ்பிளே போகாது, என் போனில் மூன்று நாள் சார்ஜ் அப்படியே இருக்கும். இதெல்லாம் உங்க போனில் வருமா? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இந்த கேள்வி இப்படி இண்டர்நெட்டில் உலா வருவதற்கு காரணமாக இருந்தது நோக்கியா 1100. நோக்கியாவின் அன்றைய பேஸிக் மொபைல் மாடல் இன்றளவும் மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்களும் கூட கூடுதலாக நீண்ட நேரம் பேசுவதற்கு இந்த மொபைலை கையில் வைத்திருப்பதை நாம் பார்த்திருக்க கூடும். 2003-ல் வெளிவந்த இந்த மாடலின் பெயரில் மீண்டும் ஸ்மார்ட்போன் வெளிவர இருப்பது ஆச்சர்யமே.
நோக்கியா, ஹூவேய், டெலினார் உள்ளிட்ட 2,100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட சர்வதேச மொபைல் காங்கிரஸ் மாநாடு பார்சிலோனாவில் 10-வது ஆண்டாக நடந்து வருகிறது. இதில், பல புதுமையான கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையில், நோக்கியாவின் பிரபலமான ஹேண்ட்செட்டாக கூறப்படும் நோக்கியா 1100-வை இன்றைய லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு லாலிபப் இயங்குதளத்துடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொபைல் போன்களின் சந்தையில் ஒரு காலத்தில் நம்பர்-ஒன் ஆக இருந்த நோக்கியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அதில் பின்னடவை சந்தித்திருக்கிறது. இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கைமாறியதையும் நாம் மறப்பதற்கில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக தற்போது ஸ்மார்ட்போன் ரிலீஸில் மவுனமாக இருந்து வரும் நோக்கியா 2016-ம் ஆண்டு இறுதியில் நோக்கியா 1100 பெயரில் ஒரு ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. ஆன்ட்ராய்டு லாலிபப் 5.0 இயங்குதளத்துடன், 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 512 ரேமில், எச்.டி. வீடியோ சப்போர்ட்டுடன் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்புடன் N1 என்ற ஆன்ட்ராய்டு டேப்லட்டையும் வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது நோக்கியா.