ஒரு பிரவுசரை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது புதிதாக மாற்று பிரவுசரை பயன்படுத்தி பார்க்க நினைத்தாலோ அதற்கான காலம் வந்துவிட்டது. விவால்டி Vivaldi எனும் பெயரில் புதிய பிரவுசர் அறிமுகமாகி உள்ளது. பவர் யூசர் என குறிப்பிடப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு என்ற அடைமொழியுடன் இந்த பிரவுசர் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த பிரவுசர்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ஓபரா பிரவுசரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் சி.இ.ஒ ஜான் வான் டெட்ஸ்னர் தலைமையிலான குழு இந்த புதிய பிரவுசரை உருவாக்கியுள்ளது. பவர் யூசர் எனப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக விவால்டி குழு தெரிவித்துள்ளது.
விவால்டியில் இருக்கும் புதிய அம்சங்களாக, இணையத்தில் உலாவும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ’டேப்’களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு வசதியாக இந்த டேப்கள் அனைத்தையும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்து வைக்கும் வசதி அமைந்துள்ளது. ஆய்வு நோக்கில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும். அதே போல அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை உடனடியாக பயன்படுத்தும் ஸ்பீடு டயல் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இணையத்தை பயன்படுத்தும் போது, பிரவுசரிலெயே அந்த இணையதளங்கள் பற்றி குறிப்பெடுத்து வைக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு இணையதளத்தை ஏன் பயன்படுத்தினோம் என்பதை எப்போது வேண்டுமானாலும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதே போல குவிக் கமாண்ட்ஸ் மூலம் பல அம்சங்களை உடனடியாக பயன்படுத்தலாம். இவை எல்லாமே இணையத்தை அதிகம் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருப்பதால் தற்போது தொழில்நுட்ப முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுவடிவம் அறிமுகமாக உள்ளது.