ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

வன்பொருள் Hardware விளக்கம்

கணினியுடன் இணைக்கப்பட்ள்ள அதன் பௌதீக உறுப்புக்கள் வன்பொருள் எணப்படும். இவற்றின் செயற்பாட்டிற்கேற்ப பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
மத்திய செயலி, சேமிப்பகம், உள்ளிடு கருவிகள், வெளியிடு கருவிகள்


1.1 மத்திய செயலி CPU (Central Processing Unit/ Processor)

இது கணனியின் பிரதான செயற்பாட்டுத் தொகுதியாகும். மென்பொருட்களின்படி செயற்பட்டு கணனியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரதான பாகத்தை மத்திய செயலி வகிக்கின்றது. இன்று பல வகையான மத்திய செயலிகள் பாவனையில் உள்ளன.
மத்திய செயலியின் செயற்பாடுகளுக்கேற்ப அதில் இரு தொகுதிகள் காணப்படுகின்றன:


எண்கணித மற்றும் தர்க்க அலகு Arithmetic and Logic Unit (ALU)

இப்பகுதியானது நேர், மறை எண்களைக் கணித்தல் செயல்களையும் மற்றும் ஒப்பிடுதல், பிறதியிடுதல் போன்ற தர்க்கவியல் செயற்பாடுகளையும் மேற்கொள்கிறது.


கட்டுப்பாட்டுத் தொகுதி Control Unit
வன்பொருட்களின் அறிவுறுத்தல்களுக்கமைய இப்பகுதியானது கணனியின் அனைத்துப் பாகங்களையும் கட்டுப்படுத்தி முகாமை செய்கின்றது.
மத்திய செயலியின் தன்மை அதன் கடிகார வேகம் (Clock Speed) , கடத்தியின் அகலம் (Bus Width), செயற்பாட்டு மையங்கள் (Execution Cores) போன்றவற்றில் தங்கியுள்ளது.


கடிகார வேகம் Clock Speed

கணனியின் பாகங்களுக்கிடையே குறிகைகள் (Signals) தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பரிமாறப்படும் வேகத்தை இது குறிக்கின்றது. குறிகைப் பரிமாற்றத்தை உறுவாக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வேண்டிய நேரக் குறிகைகளை வழங்குவது மத்திய செயலியில் உள்ள உள்ளகக் கடிகாரத்தின் (Internal Clock) வேலையாகும். குறிகை வழங்கும் செயற்பாடானது கணனியின் ஒவ்வொரு பாகங்களுக்கிடையிலும் சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. அதாவது ஒன்றன் பின் ஒன்றாக என்ற அடிப்படையில் குறிகைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். இவ்வாறு இயங்கும் மத்திய செயலியின் சுழற்சிக் காலம் ஹேட்ஸ் Hz அலகில் கணிக்கப்படுகின்றது. (ஹேட்ஸ் Hz, மெகாஹேட்ஸ் MHz, கிகாஹேட்ஸ் GHz)
இதனையே கணனியின் வேகம் என்று நாம் பொதுவாகச் சொல்கிறோம். குறித்த ஒரு கணனியின் வேகம் 1000MHz என்பதன் கருத்து, அது ஒரு வினாடியில் 1000 நேரக்குறிகைகளை வழங்குவதன்மூலம் கணனியை செயற்படுத்துகின்றது என்பதாகும். இன்றைய பாவனையிலுள்ள கணனிகள் 3GHz கடிகார வேகத்தை மிஞ்சிச் செல்கின்றன. காலத்துக்குக் காலம் புதிய வேகத்துடன் கூடிய மத்திய செயலிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


தரவுக் கடத்தியின் பருமன் Bus Width

குறித்த ஒரு நேர எல்லைக்குள் மத்திய செயலி கையாளும் / பரிமாறும் தரவின் அளவை இது குறிக்கின்றது. இத்தரவானது “பிற்” (Bit) என்ற அலகினால் அளவிடப்படுகிறது. கையாளும் / பரிமாறும் தரவின் அளவு அதிகரித்துச் செல்லும்போது மத்திய செயலியின் வலுவும் கூடிச் செல்கிறது. 8Bit, 16Bit, 32Bit, 64Bit, 128Bit, 256Bit என பல தரவுக் கடத்தி பருமனைக் கொண்ட மத்திய செயலிகள் காணப்பட்டாலும் 32Bit, 64Bit கணனிகளே பொதுவாக நமது பாவனையில் உள்ளன.


செயற்பாட்டு மையங்கள் Execution Cores

ஒரு மத்திய செயலியில் காணப்படும் செயற்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை இது குறிக்கின்றது. ஒன்றைவிட அதிகமான செயற்பாட்டு மையங்களைக் கொண்ட மத்திய செயலிகள் துரிதமாக இயங்கக்கூடியன. இதனை பின்வரும் உதாரணத்தின் மூலம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்,
ஒரு செயற்பாட்டு மையத்தைக் (Single Core) கொண்ட மத்திய செயலியைக் கொண்ட கணனியில் நாம் ஒரு பாடலை இயக்கி செவிமடுத்துக் கொண்டு, இணைய உலாவியை (Internet Browser) இயக்கி இணையப் பக்கங்களைப் பார்வையிட்டுக் கொண்டு, புகைப்படம் ஒன்றை திருத்த ஆரம்பிக்கும்போது (ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது) கணனி செயற்படும் வேகம் குறைவதை நாம் அவதானிக்கலாம். ஆனால் பல செயற்பாட்டு மையங்களைக் (Multi Core) மத்திய செயலிகள் அவ்வாறு மந்த கதியடைவதில்லை. தற்போது 8 செயற்பாட்டு மையங்களைக் கொண்ட மத்திய செயலிகள் பாவனையில் உள்ளன. (செயற்பாட்டு மையங்களின் எண்ணிக்கையுடன் கணனியின் தற்போக்கு அனுகல் நினைவகத்தின் (RAM)  அளவிலும் இது தங்கியுள்ளது. (பல மென்பொருட்கள் ஒரே தடவையில் இயங்கும்பொது அதிக நினைவகம் தேவைப்படும்)
எனவே, மத்திய செயலியின் செயற்பாட்டு மையங்கள் அதிகரிக்கும்போது அதன் செயற்திறன் அதிகரித்துச் செல்கிறது. (அதன் வேகம் அல்ல)

மத்திய செயலி தயாரிக்கும் சில நிறுவனங்கள்:       
Intel, American Micro Devices (AMD), IBM, Motorola, Cyrix, Texas Instruments